ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படும் நிலையில், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், அதை தானமாக வழங்குபவர் குறித்தும் பார்ப்போம்….
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் ஆரோக்கிய உணவு தாய்ப்பால் தான். ஆனால், பெரும்பாலான குழந்தைகளுக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கிடைப்பதில்லை என்பது தான் கசக்கும் உண்மை. போதுமான தாய்ப்பால் கிடைக்காததால் பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக, அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் சியரா, தனக்குச் சுரக்கும் தாய்ப்பாலைத், தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கி வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள பீவர்டன் பகுதியில் தன் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் எலிசபெத், கடலோரப் பாதுகாப்புப் படை வீராங்கனையாக பணியாற்றியவர். தான் கருவுற்றதால் பணியிலிருந்து விலகியவருக்கு, கடந்த 2014-ல் முதல் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே தன் உடல்நிலையில் சில மாற்றத்தை சந்தித்தார் எலிசபெத்.
எலிசபெத்தின் குழந்தை இசபெல்லா, தாய்ப்பால் நன்றாகக் குடித்தாலும், தொடர்ந்து எலிசபெத்துக்கு பால் சுரந்து கொண்டே இருந்திருக்கிறது. அதாவது, ஒரு நாளுக்கு சுமார் 5 லிட்டர் அளவுக்கு தாய்ப்பால் சுரந்திருக்கிறது. இதனால் கடும் மார்பக வலியால் அவதிப்பட்டார் எலிசபெத். மருத்துவ ஆய்வில், தனக்கு ஏற்பட்டிருப்பது ஹைப்பர் லாக்டேஷன் சிண்ட்ரோம்’ என்பது தெரியவந்ததும், தனக்குக் கடவுள் கொடுத்த பரிசு என மகிழ்ந்தார் எலிசபெத்.
https://twitter.com/60SecDocs/status/1259573926209794048
தனக்கு சுரக்கும் பாலை தினமும் சேகரித்து, குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்த தொடங்கியவர், தாய்ப்பால் தேவையுள்ள குழந்தைகளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் தானமாகவும் அளித்து வருகிறார். உதாரணத்துக்கு, போர்டோரிகோ தீவில், பிரசவத்தின்போது இறந்த தாயின் குழந்தைக்கு, அவசரமாக தாய்ப்பால் தேவைப்பட்டதால், 80 லிட்டர் தாய்ப்பாலை அனுப்பிவைத்தார் எலிசபெத்.
இதனைத் தொடர்ந்து ‘One Ounce at a Time’ என்ற தாய்ப்பால் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கிய அவர், Pumping கருவிமூலம் நாளொன்றுக்கு 6 முறை தாய்ப்பால் சேகரிப்பில் ஈடுபட்டார். இப்படி, சுமார் ஐந்து கோடி லிட்டர் தாய்ப்பாலை ஆதரவற்ற குழந்தைகள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள், திருநங்கைகள் வளர்க்கும் குழந்தைகள், தொண்டு நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகள் போன்றோருக்குத் தானமாக வழங்கியிருக்கிறார் எலிசபெத்.
200-க்கும் மேற்பட்டவர்கள் எலிசபெத்தின் வாடிக்கையாளராக உள்ளனர். “ஹைப்பர் லாக்டேஷன் சிண்ட்ரோமை மருத்துவ உதவியுடன்தான் நிறுத்த முடியும். ஆனால், அதைப் பற்றிய எண்ணம் இப்போதுவரை இல்லை” என்கிறார் எலிசபெத்.
அமெரிக்காவில் தாய்ப்பால் விற்பனை குற்றமல்ல. பல இடங்களில் தாய்ப்பால் மையம் செயல்படுகிறது. ஆனால், அங்கே கால் லிட்டருக்கும் குறைவான தாய்ப்பால் அதிக விலையில் விற்கப்படுகிறது. எலிசபெத் தன்னுடைய வீட்டில்தான் தாய்ப்பாலைப் பதப்படுத்தி வைத்துள்ளார். அதைப் பதப்படுத்த ஆகிற செலவுக்கு மட்டும், அமெரிக்க மதிப்பில் ஒரு டாலர் கட்டணமாக வசூலிக்கிறார்.
தங்கம், வைரம் போன்ற பொருட்களைத் திருடுவதுபோல், திரவத் தங்கமான தாய்ப்பால் திருட்டும் அவர் வீட்டில் அரங்கேறியுள்ளது. இதற்காகக் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ள எலிசபெத், தாய்ப்பாலைத் தானமாக வழங்குவதால் பாராட்டுகளும் குவிகின்றன.
“என்னுடைய செயல் புனிதமானது. என்னை தாய்ப்பால் வழங்கும் தேவதையாக கருதுகிறேன். இந்த உலகம் எலிசபெத் என்ற பெண்ணை அப்படித்தான் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்கிறார் எலிசபெத். தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என நினைப்பவர்களுக்கு மத்தியில், எலிசபெத் உயிர்காக்கும் தேவதைதானே..
கட்டுரையாளர்: ரேணுகாதேவி








