படப்பிடிப்பின்போது, ஹீரோயின் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், சேது, சந்தானம் நடித்த ’வாலிப ராஜா’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் நுஸ்ரத் பருச்சா. இந்தி நடிகையான இவர், இப்போது லவ் ரஞ்சன் இயக்கும் புதிய இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அவருக்குத் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் அவரை உடனடியாக இந்துஜா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி நடிகை நுஷ்ரத் கூறும்போது, ’மூன்று வாரங்களாக படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. என் ரத்த அழுத்தம் 65/55 என குறைந்துவிட்டது. என்னால் நடக்கவே முடியவில்லை. இன்னும் சில நாட்களில் சரியாகி விடுவேன்’ என்றார்.
பெரும்பாலான காட்சிகளில் நடிகை நுஷ்ரத் பங்கேற்க வேண்டும் என்பதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.








