தாராபுரம் தேர்தல் வழக்கிற்காக நாதக பெண் வேட்பாளர் கைது! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின் போது தொடரப்பட்ட தேர்தல் வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை காவல்துறையினர் கைது செய்துள்ளதற்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா இன்று காவல்துறையினரால் அதிகாலை கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இச்சம்பவத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் அச. உமர் பாரூக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “துணிச்சலுடன் மக்கள் பிரச்சினைகளையும் கொள்கைகளையும் முன்னிறுத்திப் பொதுவாழ்வில் செயலாற்றி வரும் ஒரு பெண் அரசியல் செயல்பாட்டாளருக்கு எதிராக ஆளும் அரசு மேற்கொண்டுள்ள இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

மக்களாட்சித் தத்துவத்தில் ஆளும் கட்சியின் தவறுகளையும், அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் துணிச்சலுடன் தட்டிக்கேட்பது எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால், அந்த உரிமையை நசுக்கும் வகையில், அரசியல் ரீதியான விமர்சனங்களையும் கருத்துக்களையும் போராட்டங்களையும் அடக்குமுறை மற்றும் அதிகார பலத்தின் மூலம் ஒடுக்கிவிடலாம் என ஆளும் அரசு நினைப்பது அப்பட்டமான எதேச்சதிகாரப் போக்கு. பொதுவாழ்வில் நேர்மையுடனும் துணிவுடனும் ஈடுபடும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, அவர்களை அச்சுறுத்தி முடக்கும் நோக்கில் கைது செய்வது வெட்கக்கேடானது. இத்தகைய ஜனநாயக விரோத, அராஜகப் போக்கினை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்று, கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகாவை எவ்வித நிபந்தனையுமின்றித் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.