பீகாரில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதாக, தனுஷ் பட நாயகியின் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகாரில் 2019 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், சில நாட்களுக்கு முன் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், ரிஷிகேஷ் குமார் என்பவர் தேர்வு பெற்றார். ஆனால், ஆன்லைனில் அவர் புகைப்படத்துக்குப் பதிலாக நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றது.
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷின் ’கொடி’ படத்தில் நடித்துள்ளார். அதர்வாவுடன் ’தள்ளிப்போகாதே’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றத் தகவலை, பீகாரைச் சேர்ந்த ரிது ஜெய்ஷ்வால் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. இதை பகிர்ந்துள்ள, அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தற்போதுள்ள ஆளும் கட்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் குழப்பம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடத்துக்கு முன்பு, பீகார் மாநில ஜூனியர் இன்ஜினியர் தேர்வில் நடிகை சன்னி லியோன் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகின. இப்போது அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதுபற்றி ஆளும் கட்சி தரப்பில் கூறும்போது, இது தொழிற்நுட்ப தவறாக இருக்கலாம். சரி செய்து விடுவோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
பீகாரில் இதுபோன்று பெயர் குழப்பங்கள் வருவது முதன்முறையல்ல. சில வருடங்களுக்கு முன், முஸாபர்பூர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் ஒருவரின் பி.ஏ., சான்றிதழில் அவர் தந்தை இந்தி நடிகர் இம்ரான் ஹாஸ்மி என்றும் தாய் சன்னி லியோன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.







