கடந்த ஒன்பது மாதங்களாக அதிமுக அரசு மின்வாரியத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததும் அணில்களாலும் மின்தடை ஏற்படுகிறது” என பேட்டி ஒன்றில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருந்ததும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாடு மின்மிகை மாநிலமா? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தேவை என்பது என்ன? அவற்றை பெறுவதற்கான வழிகள் எவை? தற்போது மின்வாரியத்தின் மீதான கடன் சுமை எவ்வளது? 9 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை திமுக அரசு எவ்வாறு 10 நாட்களில் முடிக்கும்? என பல கேள்விகள் மேலெழுந்துள்ளன. அத்துடன் அணில் போன்ற உயிரினங்களால் மின்தடை ஏற்படுவதற்கு சாத்தியமா? எனும் கேள்வி பல்வேறு தரப்பினரிடமிருந்து முன்வைக்கப்பட்டது. மறுபுறம் அமைச்சரையும், அணிலையும் வைத்து மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் தெறிக்கவிடப்பட்டது.
அமைச்சரின் விளக்கத்திற்கு விடைதேடி நியூஸ்7 தமிழ் மின்வாரிய களப்பணியாளர்களிடம் விரிவாக கலந்துரையாடியது. நம்முடன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் மத்திய மின் ஊழியர்கள் கூட்டமைப்பின் தமிழ் மாநில தலைவர் ஜெய்சங்கர் (சிஐடியு).
அணில்கள் அல்லது சிறு சிறு உயிரினங்களால் மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?
“சமீபத்தில் மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அணில்களால் மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆனால் அதுவே பிரதானமல்ல என தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலானது. ஆனால், கள யதார்த்தத்தில் நாங்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். அமைச்சர் சொன்னதில் உண்மை உள்ளது.

துணை மின்நிலையத்தில் கேபிள் புதைப்பதற்கான பள்ளத்திலும்,துணை மின்நிலையத்தில் கேபிள் செல்லும் வழியில் உள்ள பிரேக்கரிலும் நிச்சயம் பாம்பு அல்லது வேறு ஏதாவதொறு உயிரினம் பதுங்கியிருக்கும். இந்த பகுதி கதகதப்பாக இருப்பதால் உயிரினங்களின் வருகை தவிர்க்க இயலாததாக மாறிவிடுகிறது.
சாதாரணமாக ஸ்டச்சர் என்று சொல்லப்படும் மின் கம்பிகளில் காகம் அடிப்பட்டு இறந்து போவதால் ஜம்ப் எனும் முக்கிய பகுதியில் இணைப்பு துண்டிக்கப்படும். இதனால் துணை மின்நிலையத்தில் பிரேக்கர் ட்ரிப் ஆகும், பிரேக்கரின் உள்ளே உள்ள இன்சுலேட்டர் பழையதானதாகவோ, பழுதானதாகவோ இருந்தால், அது உடனடியாக வெடிக்கும். இப்படி ‘பட்டர்ப்ளை எஃப்பர்ட்’ போல எங்கோ ஒரு காகம் தாறுமாறாகப் பறந்து மின்சார கம்பியில் சிக்குவதால், அது துணை மின்நிலையத்தில் உள்ள இன்சுலேட்டர் வெடிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதுபோலத்தான் அணில்கள் மற்றும் இதர சிறு சிறு உயிரினங்களும் மின்தடையை ஏற்படுத்துகின்றன. இதைத்தான் அமைச்சர் கூறியுள்ளார். இது இன்றைய நேற்றைய பிரச்னையல்ல. காலங்காலமாக உள்ள பிரச்னை. தற்போதுதான் பொதுவெளியில் இது அரசியல் முக்கியஸ்தர்களால் பகிரப்படுவதால் பேசு பொருளாக மாறியுள்ளது.”
ஒரு அணில் அல்லது காகத்தால் மின்தடை ஏற்படும் அளவில்தான் நமது மின் பகிர்மான கட்டமைப்பு உள்ளதா?
“3.14 கோடி நுகர்வோர்கள், 3.4 லட்சம் மின்மாற்றிகள், சுமார் 1.81 லட்சம் கி.மீ உயர் மின்னழுத்த பாதைகள், 6.34 லட்சம் கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் என தமிழ்நாடு மின்சார வாரியம் இந்தியாவின் மிகப்பெரிய மின்வாரியங்களில் ஒன்றாக உள்ளது. இவ்வனத்தையும் முறையாக பராமரித்து மேம்படுத்தினால் மட்டுமே நாம் அணில்கள் அல்லது இதர உயிரினங்கள் ஏற்படுத்தும் மின் தடையிலிருந்து மீள முடியும். ஆனால், தமிழகத்தில் மின்வாரியத்திற்கு ரூ.1.33,671 கோடி கடன் உள்ளது.

இவைமட்டுமல்லாது ஆட்கள் பற்றாக்குறையும் நிலவிவருகிறது. நேரடியாக மக்களிடையே மின்சார பராமரிப்பு சார்ந்த பணிகளை செய்வதற்கு மட்டும் 60 சதவிகிதமான ஆட்கள் பற்றாக்குறை மின்சார வாரியத்தில் நிலவி வருகிறது. இந்த பற்றாக்குறையை நீக்காமல், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பராமரிப்பு பணிகளால் ஏற்பட்ட பாதிப்பை வெறும் 10 நாட்களில் சீர்செய்துவிட முடியும் என்கிற அமைச்சரின் வாக்குறுதி மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.”
தமிழகம் மின்மிகை மாநிலம் என கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டதே?
“தமிழகம் எப்போதும் மின்மிகை மாநிலமாக இருந்தது கிடையாது. தமிழகத்தின் ஒரு மணி நேர மின்சாரத்தேவை என்பது 16,500 மெகாவாட். சென்னைக்கு மட்டும் 3,750 மெகாவாட். ஆனால், தமிழக மின்வாரிய உற்பத்தி 5,822 மெகாவாட், மத்திய தொகுப்பு 6,166 மெகாவாட். ஆக பற்றாக்குறை மட்டும் 4,512 மெகாவாட். இதை தமிழகம் தனியாரிடமிருந்தே பெறுகிறது. இப்போது சொல்லுங்கள் தமிழகம் மின்மிகை மாநிலமா? 2018-19ம் ஆண்டில் 13 ஆயிரத்து 176 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத்துறை தற்போது தெரிவித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் மத்திய மின் ஊழியர்கள் கூட்டமைப்பின் தமிழ் மாநில தலைவர் ஜெய்சங்கர் (சிஐடியு).
ஆக இந்த நிதி பற்றாக்குறை, தொழிலாளர்கள் பற்றாக்குறை இவற்றோடு ஒன்றாகத்தான் அணிலாரும் நமது பஞ்சாயத்தில் தெரியா தனமாக நுழைந்துவிட்டார். நாமும் பிரதான பிரச்னையை பேசாமல் அணிலை வைத்து காலங்கடத்திக்கொண்டுள்ளோம்.”







