இனி கோட் படம் உங்களுடையது எனவும், எப்போதும் இல்லாத அளவுக்கு தளபதியை கொண்டாடுங்கள் எனவும் இயக்குநர் வெங்கட் பிரபு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் இன்று (செப். 5) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கோட் திரைப்படத்தின் 9 மணி சிறப்பு காட்சிக்கு இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திரைப்படத்தை வெளிநாட்டில் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், அஹிம்சா நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் வெங்கட் பிரபு பேசியதாவது, “ஹாய் பிரிட்டன், ஹாய் லண்டன். வெளிநாட்டில் வெளியிடும் அஹிம்சாவுக்கு நன்றி. நான் 19 ஆண்டுகள் அங்குதான் படித்தேன். பிரிட்டன், ஐரோப்பாவில் என்னுடைய பேனர்களை பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. வார்த்தைகளே இல்லை.
இதற்கு முக்கியமான காரணம் தளபதி விஜய்தான். அவருக்கு நன்றி. அத்துடன் ஏஜிஎஸ் அகோரம் சார், அர்ச்சனா அவர்களுக்கும் எனது நன்றிகள். படம் ரிலீஸ் ஆகிறது. இனிமேல் கோட் படம் உங்களுடையது. மகிழ்ச்சியாக இருங்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு தளபதியை கொண்டாடுங்கள்” என தெரிவித்துள்ளார்.







