எண்ணூர் ஈரநிலங்கள் மேலும் சீரழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ஆக்கிரமிக்கப்படாத ஈரநிலங்கள் முழுமையையும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
எண்ணூர் மீனவர்கள் ரவிமாறன், ஸ்ரீனிவாசன், சரவணன் ஆகியோர் நிலக்கரி சாம்பலால் மாசுப்பட்ட ஈரநிலத்தை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், எண்ணூர் ஈரநிலங்கள் மேலும் சீரழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ஆக்கிரமிக்கப்படாத ஈரநிலங்கள் முழுமையையும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் கீழ் சேர்த்து அறிவிக்கை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், கூட்டு நிபுணர் குழு (Joint Experts Committee) மார்ச் 2022ல் அளித்த அறிக்கையில் அளிக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய குறிப்பாணையின் படி ( ToR) விரிவான திட்ட அறிக்கையை 9 மாத காலத்தில் சுற்றுச்சூழல் துறை தயார் செய்ய வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
1996ஆம் ஆண்டின் கடற்கரை மேலாண்மை மண்டல வரைபடத்தினை அடிப்படையாகக்கொண்டு எண்ணூர் ஈரநிலங்களில் உள்ள ‘பயன்படுத்தப்படாத’ (unutilised) பகுதிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மேலும் வளர்ச்சி நடவடிக்கைகள் என அப்பகுதியை அழிக்காமல் அப்பகுதியை காப்பாற்ற வேண்டும் என்றும், அரசின் ஈரநில இயக்கத்தின் கீழ் அப்பகுதியை எண்ணூர் ஈரநிலங்கள் என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்றும், எண்ணூர் எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் தன்மையுள்ள கழிவெளி உயிர்ச்சூழல் மற்றும் எண்ணூர் ஈரநிலங்கள் தொகுப்பை மீட்டெடுப்பதற்கான திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கூடுதலாக, மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டும், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், TANGEDCO வின் அதிகாரிகளை உள்ளடக்கியும் கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் கமிட்டி TANGEDCOவின் செயல்பாடு தொடர்பான பொதுமக்கள் புகார்களைக் கேட்டு, தீர்வு காண்பதற்கான காலாண்டு கூட்டங்களை நடத்த வேண்டும். TANGEDCO உரிமம் இன்றி செயல்படுவதன் மீது குற்ற விசாரணை நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
“கூட்டு நிபுணர் குழு அளித்த ToRs படி மீட்டெடுக்கும் திட்டம் உருவாக்கப்பட்டால், ஆறு மறுவாழ்வு பெறும் என்பது உறுதி. அப்படி நடந்தால், உள்ளூர் மீனவர்களின் வறுமை ஒழிக்கப்படும். வட சென்னை வெள்ளத்திலிருந்து காக்கப்படும்”, என்று இவ்வழக்கை தொடர்ந்த எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரத்தை சேர்ந்த சரவணன் கூறினார்.








