சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸில் புதிய பொறுப்பு

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி பல்வேறு பிரசாரப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்டுப்பாட்டு அறைக் குழுவை அக்கட்சி அமைத்துள்ளது. அதன் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி…

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி பல்வேறு பிரசாரப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கட்டுப்பாட்டு அறைக் குழுவை அக்கட்சி அமைத்துள்ளது. அதன் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை காங்கிரஸ் நியமித்துள்ளது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியில் அமர்வதற்கான பணிகளை கர்நாடகா காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை ஒருங்கிணைப்பதற்காக கட்டுப்பாட்டு அறைக் குழு (War room team) அமைக்க அந்த மாநில காங்கிரஸ் திட்டமிட்டது. அதற்கான ஒப்புதலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழங்கியது.

அதன்படி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு கட்டுப்பாட்டு அறைக் குழுவின் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமி்கப்பட்டார். சுனில் கனுகெளலி ஒட்டுமொத்த பொறுப்பாளராக நீடிப்பார் எனவும், சுராஜ் ஹெக்டே மாநில காங்கிரஸ் யூனிட்டின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இத்தகவல் அகில காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகாந்த் செந்தில் கர்நாடகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை திடீரென அவர் ராஜிநாமா செய்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தபோது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியிலும் அவர் இணைந்தார்.

“என் மீது நம்பிக்கை வைத்து அளிக்க பொறுப்பை சிறப்பாக செய்வேன். எனக்கு மிகப் பெரிய பொறுப்பை வழக்கியதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சசிகாந்த் செந்தில் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் தகவல்தொடர்பு மற்றும் சமூக வலைத்தள குழுவின் பொறுப்பாளராக பிரியங் கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். லாவண்யா பல்லால், கவிதா ரெட்டி, நாகலட்சுமி, ஐஸ்வர்யா மகாதேவ் ஆகியோர் செய்தித்தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இநதத் தகவலும் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.