தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சருக்கு ஒன்றும் ஆகாது என்று திமுக எம்எல்ஏவும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் திமுக சார்பில் அக்கட்சியின் கழக
முன்னோடிகளுக்கு பொற்கிழி, மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும்
பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். நான் போகுமிடமெல்லாம் தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் என்னை அன்போடு வரவேற்று கை கொடுக்கின்றனர். இப்போது தமிழக முதலமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வரும் வழியில் எல்லாம் மக்கள் அவரைப் பற்றி நலம் விசாரிக்கின்றனர். அவருக்கு எதுவும் ஆகாது.
நான் சேப்பாக்கம் தொகுதிக்கு மட்டும் செல்லப்பிள்ளை என்று சொல்கிறார்கள். இல்லை,
நான் எல்லா தொகுதிக்கும் செல்லப் பிள்ளைதான், என்னை எல்லோரும் சின்னவர் என்று
அழைக்கின்றனர். ஆனால் நான் சொல்லித்தான் நீங்கள் அழைப்பதாக பலர் கூறுகின்றனர்.
அதிமுகவை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும், அவர்களே அடித்து கொண்டு
ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொள்கிறார்கள். இதுவரை திமுக இளைஞரணி சார்பாக நான் 10 கோடி ரூபாய் நன்கொடை பெற்று உள்ளேன். அதில் வரும் வட்டியை வைத்து கழக நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்வேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியானது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம்
சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி
யுவராஜ், உத்திரமேரூர் ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் சாலவாக்கம் ஒன்றிய
செயலாளர் குமார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.








