வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளேன் என்று நம்புகிறேன்-உதயநிதி ஸ்டாலின்

எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை என்னால் இயன்றவரை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளேன் என்றே நம்புகிறேன் என்று திமுக இளைஞரணி செயலாளரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்று நேற்றுடன் 3…

எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை என்னால் இயன்றவரை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளேன் என்றே நம்புகிறேன் என்று திமுக இளைஞரணி செயலாளரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்று நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி, அவர் அனைவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியலை-அரசை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், 2019 ஊராட்சி சபைக் கூட்டங்கள் – நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களுக்காக தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் சுற்றிவரும்போதுதான் மக்களை, அவர்களின் உணர்வுகளை, தமிழகத்தின் புவியியல் தன்மையை இன்னும் நெருங்கிச் சென்று பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். மக்கள் என்னை தங்களில் ஒருவனாகவே ஏற்றுக் கொண்டனர் என்பதை இந்தப் பயணத்தின் மூலம் உணர்ந்தேன்.

பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் கழகத் தலைவர் ஆகியோரின் வழியில் தொடர்ந்து பயணித்து தமிழக மக்களைக் காக்கும் பணியிலும், கழகத்தை வளர்த்தெடுக்கும் பணியிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

கழகத்தின் நாற்றங்காலாக விளங்கும் இளைஞர் அணியினரான எங்களை மூத்த முன்னோடிகள், நிர்வாகிகள் வாழ்த்துங்கள், வழிநடத்துங்கள்! நாங்கள் கழகத்துக்காக உழைத்திட என்றும் தயாராக இருக்கிறோம். இளைஞர் அணிச் செயலாளர் என்ற கடமை மிகுந்த பொறுப்பை வழங்கிய தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, வணக்கம் என்று அந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.