30.3 C
Chennai
May 8, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

’வி.பி.சிங்’ பெயர் மட்டும் அல்ல, அவரின் செயல்களும் வித்தியாசமானவையே!

அரசு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக, தன் ஆட்சியைத் தியாகம் செய்த மண்டல் கமிசன் நாயகன் முன்னாள் பிரதமர் வி பி சிங் பற்றி அவரின் 1992வது பிறந்த நாளில் அவரைப்பற்றிப் பார்ப்போம்.

’வி.பி.சிங்’ பெயர் மட்டும் அல்ல, அவரின் செயல்களும் வித்தியாசமானவையே!

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய நாட்டின் பிரதமராக அவர் ஆட்சி செய்தது ஒரு ஆண்டு தான், ஆனாலும் அந்த குறுகிய காலத்தில் ‘இந்திய அரசியலில், வரலாற்றில் ஒப்பற்ற தலைவராக அவர் உயர்ந்தார். மன்னர் மானியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரானார். பிறப்பாலும், வளர்ப்பாலும், அரச குடும்ப பரம்பரையைச் சார்ந்தவர். ஆனால், நாட்டின் உயரிய பதவியான பிரதமராகப் பதவியேற்ற போது 30 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட, மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஏற்றுச் சட்டமாக்கினார்.இதனால் பட்டியல் , பழங்குடியின மக்களையடுத்து , நாட்டின் மிகப்பெரிய உழைக்கும் வர்க்கமான பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கிடைக்க வழி வகை உருவானது.

விஸ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங்கின், பிறப்பும் வாழ்வும் நேரெதிரானவை. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள தையா என்ற சமஸ்தானத்தின் அரசர் ராஜகோபால் சிங் – ராதாகுமாரி தம்பதிக்கு , 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இரண்டாவது மகனாகப் பிறந்தார். பின்னர் மண்டா சமஸ்தானத்தின் அரசர் ராஜ்பகதூர், தனது வாரிசாகச் சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞான பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்குத் தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.

டேராடூனிலும்,அலகாபாத்திலும், பள்ளிப்படிப்பை முடித்தார்.புனே பெர்குஷன் கல்லூரியில் பி. எஸ். சி படித்தவர், அணு ஆற்றல் குறித்த ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவராக இருந்தார்.அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம். எஸ். சி. படிப்பை முடித்த பின், ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் இணைந்தார்.

அண்மைச் செய்தி: ‘தேங்காயை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்’

எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969- ஆம் ஆண்டு,உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் ,காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய செயல்பாடுகளால்,அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி,1974 ஆம் ஆண்டு,தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார்.பின்னர் காபினட் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்

எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது.

1980 ஆம் ஆண்டு வி.பி.சிங் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சரானார். முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார் , ஒரு சில கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவது தாமதமாகிறது, என்ற விமர்சனத்திற்குப் பதிலடியாக, இரண்டு வருடங்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.1983 ஆம் ஆண்டு மீண்டும் மத்திய வர்த்தக துறை அமைச்சரானார் . ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆனார் வி.பி.சிங்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த,திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் எனப் பலரும் இவரது நடவடிக்கைக்குத் தப்பவில்லை. இவரின் நேர்மையான செயல்பாடுகள், பல முக்கியப் புள்ளிகளுக்கு அழுத்தம் தரவே, நிதியமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சரானார் போபர்ஸ் பீரங்கி விவகாரத்தில், பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். எம்.பி பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் விபிசிங்.

‘ஜனமோர்ச்சா’ என்ற கட்சியைத் தொடங்கினார். அலகாபாத் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்று மீண்டும் மக்களவை சென்றார். 1988 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்திக்கு பிந்தைய வாரத்தில் ,ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து, ஜனதா தளம் உதயமானது. ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கன பரிஷத்துடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது.

1989-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேசிய முன்னணி, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமரான வி.பி.சிங், பாபா சாகேப் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் கொடுத்து, நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்தார். காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உறுதுணையாக இருந்தார். 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான, மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தினார்.மாநிலங்களிடையே மன்றம் அமைத்தார்,சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தள முனையத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமானதள முனையத்துக்குக் காமராஜர் பெயரும் சூட்டினார்.

அரசியல் கணக்கு பார்க்காமல், பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை கணக்கை மேம்படுத்த உறுதி பூண்டு, தன் ஆட்சியையே தியாகம் செய்தார். ஆம் மண்டல் கமிசன் பரிந்துரையை விபிசிங் அமல்படுத்தியதால் , பாஜக, விபி சிங் அரசுக்கு கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லாததால்,உடனடியாக பிரதமர் பதவியை விட்டு விலகினார்.இட ஒதுக்கீட்டின் நாயகன்,சமூக விஞ்ஞானி எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். கல்லூரியில் அணுவிஞ்ஞானத்தை ஆர்வமாகப் படித்தாலும்,அரசியல் வாழ்வில் சமூக விஞ்ஞானியாக அவர் செயல்பட்டார் என்றால் மிகையில்லை.

உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், அடித்தட்டு மக்களுக்காகக் கடைசி வரை போராடினார்.2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, போராட்டங்கள் நடத்தினார். “பிரதமர் பதவியைவிட முக்கியமானது, நாட்டின் ஒற்றுமை” எனப் பதவி விலகும் போது அவர் கூறினார். இட ஒதுக்கீட்டின் நாயகன்,சமூக விஞ்ஞானி எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.

– தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading