ரஷிய அதிபர் புதினை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவுக்கு ரயிலில் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் முக்கியத்துவம் என்ன? கிம் பயணிக்கும் ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன? அனைவர் மனதிலும் இதே கேள்விதான் எழுகிறது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடையே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆயுத பரிமாற்றம் என்பதாலும் தற்போது உக்ரைன்- ரஷியா இடையே போர் நடைபெற்று வருவதாலும் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். இந்நிலையில், வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே உள்ள 1,180 கிமீ தூரம் உள்ள நிலையில், வெறும் 50 கிமீ வேகத்தில்தான் செல்லக்கூடிய ரயிலில் கிம் ஜாங் உன் பயணம் மேற்கொள்வது ஏன்? என்ற கேள்விதான் பரவலாக எழுந்திருக்கிறது. ஏவுகணை சோதனைகளால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையே ஆட்டிப் படைக்கும் வடகொரிய அதிபர் ரயிலில் செல்கிறார் என்றால் அது சிறப்பு ரயிலாகத்தானே இருக்கும்.
ஆம், இது சாதாரண ரயில் அல்ல, முழுக்க முழுக்க பாதுகாப்பு வசதிகளுடன் பல்வேறு அம்சங்களுடன் வடகொரிய ஆட்சியாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில்.
அப்படி என்ன இருக்கிறது இந்த ரயிலில்?
கரும்பச்சை நிறத்தில் இருக்கும் ரயில் முழுவதும் குண்டு துளைக்காத பாதுகாப்பு வசதி உள்ளது. கிம் ஜாங் உன் மட்டுமின்றி அவரின் தந்தை, அவரது தாத்தா என இதற்கு முன்னதாக வடகொரியாவை ஆட்சி செய்தவர்கள், சீனா, ரஷியா அல்லது சோவியத் யூனியனுக்குச் செல்ல இந்த ரயிலைப் பயன்படுத்தியுள்ளனர். முதல்முதலாக உருவாக்கப்பட்ட சோவியத் யூனியனின் விமானங்களில்கூட பாதுகாப்பான நீண்ட பயணம் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வடகொரிய அதிபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
2009ல் தென்கொரிய அறிக்கையின்படி, ரயிலில் குறைந்தது உயர் பாதுகாப்பு கொண்ட 90 பெட்டிகள் இருக்கும். கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங்-இல் காலத்தில் அவர் பயணிக்கும்போது மூன்று ரயில்கள் இயக்கப்படும். முன்,பின் என இரண்டு ரயில்களுக்கு இடையே அதிபரின் ரயில் செல்லும். மூன்றாவது ரயிலில் கூடுதல் காவலர்கள் மற்றும் பொருள்கள் இருக்கும்.
இதில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் குண்டு துளைக்காத அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1,000 பவுண்டு அதிகமாக எடை இருக்கும். அதிக எடை கொண்டதாலும் பாதுகாப்பு ஆயுதங்கள் இருப்பதாலும் இது மிகவும் மெதுவாகவே செல்லும். அதிகபட்ச வேகம் மணிக்கு 37 மைல் அல்லது 50 கிமீ.
மேலும் கடந்த 2009ல் கிம் ஜாங்-இல் உடன் 100 காவலர்கள் சென்றதாகவும் அவர்கள் முதல் ரயிலில் பயணித்து அனைத்து ரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு சோதனை அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதை சோதித்ததாகவும் கூடுதல் பாதுகாப்பாக ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ரயிலின் மேலே பறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதிபர் செல்வதற்காக அங்கு 20 புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டில் கிம் ஜாங்-உன் சீனாவுக்குச் சென்றபோது சீன அதிகாரி ஏறிய பெட்டியில் சிவப்பு நிற சோஃபாக்கள் வரிசையாக இருந்துள்ளது. இதில் ஒரு டிவி, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களும் வைக்கப்பட்டிருக்கும்.
முதல் சந்திப்புக்கு ஒரு பெட்டி, முக்கிய சந்திப்புக்கு ஒரு பெட்டி, விருந்துக்கு ஒரு பெட்டி என தனித்தனியாக உள்ளன. விருந்துக்கான ரயில் பெட்டியில் நடனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதிபரின் தனிப்பட்ட ரயில் பெட்டி அறையில் உள்ள மேசை, கணினி உட்பட பொருள்கள், அரண்மனையில் பாதுகாக்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக ஆயுதங்கள், ஏன் அவசர காலத்தில் தப்பித்துச் செல்ல ஹெலிகாப்டர் கூட வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பும் ரயிலில் உள்ளது. மேலும் இந்த ரயில் ரஷியா, சீன, கொரிய, ஜப்பானிய, பிரெஞ்சு உணவுகள் வழங்கப்படுகின்றன. எந்த நேரமும் ஒயினும் தயாராக இருக்கும். அதுபோல ரஷிய மற்றும் கொரிய மொழிகளில் பொழுதுபோக்குக்காக பெண்கள் குழுவும் இருப்பர்.