அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி; முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்

தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில்…

தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 24ம் தேதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திராவிட முன்னேற்றக் கழகத்தில் கழகமே குடும்பம் என்பது போய் குடும்பமே கழகமானது என்றும் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் திரைப்பட உலகில் ஒரு கத்துக்குட்டி. திரைப்படங்களில் வெற்றி பெறவில்லை என்பதினால் தற்போது அரசியலுக்கு வருகிறார் என்றார்.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு முன்பு அவரின் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் எனக் கூறியிருந்தார்.  ஆனால் நேற்று ஒரு சொல் இன்று ஒரு சொல். உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்குக் கொண்டு வருவது மூத்த அமைச்சர்கள் வருத்தத்திலும் மனவழுத்தத்திலும் உள்ளனர். அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என ஜெயக்குமார் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து பட்டம் சூட்ட தமிழக ஆளுநர் தேவைப்படுகிறார். ஆனால் மற்ற தேவைகளுக்கு ஆளுநர் தேவை இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

நாளை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க மாட்டார் என்பது தனது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

ஒ.பன்னீர்செல்வம் அழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்கேற்பார். அது போன்றுதான் குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பாக பங்கேற்க வில்லை. அவரை பொருத்தவரை திருமண விழாவில் மன மகனாவும், சாவு வீட்டில் பிணமாகவும் இருக்கக் கூடியவர். மிக பெரிய நடிகர்.  உதயநிதி பட்டத்து இளவரசர் ஆக்குவது மூலம் எந்த மாற்றம் வரப்போவது இல்லை என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.