நின்று செல்லாத ரயில்கள்: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கடம்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ரயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில்கள்…

கடம்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ரயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழியாக இயக்கப்படும் ரயில் சேவையை இப்பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கொரோனா கால கட்டத்திற்கு முன்பு வரை புனலூர், மதுரை, கொல்லம், சென்னை, தூத்துக்குடி, மைசூர் விரைவு ரயில், நாகர்கோவில், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் ரயில்கள் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. இதனால் தொழில், பள்ளி, கல்லூரி, பணி நிமித்ததம்மாக பயணம் செய்த அனைவரும் எந்தவித சிரமமுமின்றி பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்களும் தற்போது நிற்காமல் செல்வதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வியாபாரிகள் தொழில் நிமித்தமாக சரியான நேரத்திற்கு சென்று தேவையானவற்றை வாங்கி வர முடியாமல் சிரமப்படுவதால் வியாபாரமும் பெரிய அளவில் பதிப்படைந்துள்ளது.

இதனால் கடம்பூர் ரயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற ரயில்கள் அனைத்தும், மீண்டும் நின்று செல்ல வலியுறுத்தி கடம்பூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் முழுகடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் கடம்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடம்பூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில்
30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.