யாரும் என்னிடம் பேசவில்லை: யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுக்குப் பிறகு யாரும் தன்னிடம் பேசவில்லை என்று யஷ்வந்த் சின்ஹா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.…

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுக்குப் பிறகு யாரும் தன்னிடம் பேசவில்லை என்று யஷ்வந்த் சின்ஹா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்பட்டவர் யஷ்வந்த் சின்ஹா.

தேர்தல் தோல்வியை அடுத்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும் தானும் யாரிடமும் பேசவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தனிப்பட்ட நட்பு காரணமாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவரிடம்(மம்தா பானர்ஜி) மட்டும் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாழ்வில் அடுத்து என்ன செய்ய முடியும், எத்தகைய கடமைகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறித்து யோசித்து வருவதாகத் தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, தற்போது தனக்கு 84 வயது ஆவதால் அது ஒரு தடையாக இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, இன்னும் எவ்வளவு காலத்திற்கு பொதுவாழ்வில் இருக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதை சுட்டிக்காட்டிய யஷ்வந்த் சின்ஹா, தற்போது எந்த கட்சியிலும் இல்லை என்ற நிலையிலேயே தொடர்வதாகவும், எந்த கட்சியிலும் இணையும் எண்ணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில வாரங்களாக நாட்டின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்து வந்த யஷ்வந்த் சின்ஹா, தற்போது தனித்துவிடப்பட்டிருக்கிறார்.

அவரது ஆதங்கம் அரசியலின் மறுபக்கம் எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதையே வெளிக்காட்டுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.