கள்ளக்குறிச்சி சம்பவம் – வீடியோ பதிவை சேகரிக்கும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின்போது, சிசிடிவி-யில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்த காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த…

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின்போது, சிசிடிவி-யில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்த காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்ந்து பேசு பொருளாகவே இருந்து வருகிறது. மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம் கடந்த 17-ம் தேதி வன்முறையாக வெடித்தது.

 

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு, அன்றைய தினம் சம்மந்தப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடியோ காட்சிகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது, வீடியோ காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளியில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உள்ள காவல்துறையினர் அதில் உள்ள வீடியோ பதிவுகளை திரட்டி வருகின்றனர். கலவரத்தின் போது, சிசிடிவி காட்சிகள் மற்றும் அதன் ஹாடுடிஸ்குகள் தீயிட்டு எரிக்கப்பட்டதால், தொழில் நுட்பம் உதவியுடன் அதில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் சேகரிக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

 

மேலும், அந்த பகுதியில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட 63 சிசிடிவி கேமராக்களையும் அதில் பதிவான வீடியோ காட்சிகளையும் தற்போது கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் மீது சிறப்பு புலனாய்வு காவல்துறையினரின் நடவடிக்கை பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.