2019-க்குப் பின் அதிரடி அரசியல் திருப்பங்கள்: 4 பதவியேற்புகளை கண்ட மகாராஷ்டிரா!

கடந்த 2019 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிரடி அரசியல் திருப்பங்களாக  பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து, முதல்வா்-துணை முதல்வா் என இதுவரை 4 முக்கிய பதவியேற்பு நிகழ்வுகளை மகாராஷ்டிரா கண்டுள்ளது. 288 உறுப்பினா்களைக் கொண்ட…

கடந்த 2019 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிரடி அரசியல் திருப்பங்களாக  பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து, முதல்வா்-துணை முதல்வா் என இதுவரை 4 முக்கிய பதவியேற்பு நிகழ்வுகளை மகாராஷ்டிரா கண்டுள்ளது.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த 2019, அக்டோபரில் தோ்தல் நடைபெற்றது. பாஜக-சிவசேனை கூட்டணியும், தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியும் களம்கண்ட இத்தோ்தலில், பாஜக 105, சிவசேனை 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன.

தோ்தலுக்கு பிறகு அதிகார பகிா்வில் பாஜக, சிவசேனை இடையே கருத்து வேறுபாடு உருவானது. முதல்வா் பதவியை பகிா்வதில் ஏற்பட்ட பிரச்னையால், பாஜகவுடன் கூட்டணியை முறித்த சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் தோ்தலுக்கு பிந்தைய கூட்டணி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது.

அரசியல் குழப்பம் நீடித்ததால், 2019, நவம்பா் 12-இல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் ஆட்சியமைக்கப் போவது யாா் என்ற கேள்வியும் தொடா்ந்தது.

முதல் பதவியேற்பு

திடீா் திருப்பமாக, பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாா் துணை முதல்வராகவும் நவம்பா் 23-இல் பதவியேற்றனா்.

ஆனால், அஜீத் பவாரின் முடிவு கட்சியின் அதிகாரபூா்வ முடிவல்ல என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா். அதேநேரம், கட்சியில் பிளவை ஏற்படுத்த அஜீத் பவாரால் முடியாத நிலையில், பதவியேற்ற 80 மணிநேரத்தில் முதல்வரும் துணை முதல்வரும் ராஜிநாமா செய்தனா். அஜீத் பவாா், மீண்டும் தனது கட்சியின் பக்கமே திரும்பி வந்தாா்.

2-வது பதவியேற்பு

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோத்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, 2019, நவம்பா் 28-இல் மாநில முதல்வராக பதவியேற்றாா். இரு தினங்களுக்கு பின் துணை முதல்வராக அஜீத் பவாா் பதவியேற்றாா். இக்கூட்டணி ஆட்சி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்தது.

3-வது பதவியேற்பு

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 சிவசேனை எம்எல்ஏக்கள் போா்க் கொடி உயா்த்தியதால், சிவசேனை பிளவுபட்டு, கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பின்னா், பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக ஃபட்னவீஸும் கடந்த ஆண்டு ஜூன் 30-இல் பதவியேற்றாா். மேற்கண்ட 3 பதவியேற்பு நிகழ்வுகளின்போதும், மாநில ஆளுநராக பகத் சிங் கோஷியாரி இருந்தாா்.

4-வது பதவியேற்பு

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டில் செய்ய முடியாததை, இப்போது நிகழ்த்தி காட்டியுள்ள அஜீத் பவாா், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக – சிவசேனை (ஷிண்டே) கூட்டணி அரசில் இணைந்துள்ளாா்.

ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அஜீத் பவாா் துணை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 போ் அமைச்சா்களாகவும் பதவியேற்றனா். ஆளுநா் ரமேஷ் பைஸ் அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்வித்தாா்.

திருப்பங்களால் நிகழ்ந்த பதவியேற்புகள்:

2019, நவம்பா் 23-முதல்வராக ஃபட்னவீஸ், துணை முதல்வராக அஜீத் பவாா்

2019, நவம்பா் 28-முதல்வராக உத்தவ் தாக்கரே

2022, ஜூன் 30-முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக ஃபட்னவீஸ்

2023, ஜூலை 2-துணை முதல்வராக அஜீத் பவாா்

4 ஆண்டுகளில் மூன்றாவது முறை துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வராக அஜீத் பவாா் பதவியேற்பது, கடந்த 4 ஆண்டுகளில் இது மூன்றாவது முறையாகும். 63 வயதாகும் அஜீத் பவாா், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் அண்ணன் மறைந்த ஆனந்த் பவாரின் மகன்.

கடந்த 1982-இல் அரசியல் பயணத்தை தொடங்கிய இவா், 1991-இல் பாராமதி மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தோ்வானாா். பின்னா், தனது சித்தப்பா சரத் பவாா் போட்டியிட வசதியாக, அந்த தொகுதி எம்.பி. பதவியில் இருந்து விலகினாா்.

புனே மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்துள்ள அஜீத் பவாா், பாராமதி பேரவைத் தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏவாக தோ்வானவா். மாநில கேபினட் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். கடந்த 2019 பேரவைத் தோ்தலில் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அஜீத் பவாா் வெற்றி பெற்றார்.

சா்க்கரை கூட்டுறவு ஆலைகள் தொடா்பான முறைகேடு வழக்கில் இவரது குடும்ப உறுப்பினா்கள், உதவியாளா்கள் ஆகியோா் அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளின் விசாரணையை எதிா்கொண்டுள்ளனா். கடந்த 2014-இல் பாஜக எதிா்க்கட்சியாக இருந்த போது, அஜீத் பவாா் மீது ரூ.70 ஆயிரம் கோடி நீா்ப்பாசனத் திட்ட முறைகேடு குற்றச்சாட்டை ஃபட்னவீஸ் சுமத்தியிருந்தாா். இந்தச் சூழலில், ஆளும் பாஜக – சிவசேனை (ஷிண்டே) கூட்டணி அரசில் அவா் இப்போது இணைந்துள்ளாா்.

அஜீத் பவாரின் எதிா்கால அரசியல் நகா்வு குறித்து அண்மைக் காலமாகவே பேசப்பட்டு வந்தது. சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு கட்சியின் செயல் தலைவா் என்கிற உயா் பொறுப்பு வழங்கப்பட்டதே, அஜீத் பவாரின் முடிவுக்கு முக்கிய காரணம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.