வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் யாரும் போராடவில்லையென பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த தமிழ் கையேட்டினை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்ட கே.அண்ணாமலை,வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் யாரும் போராடவில்லையென பேட்டியளித்துள்ளார்.
மேலும், “இந்தியாவில் விவசாயிகளுக்கு பா.ஜ.க அரசு செய்துவரும் திட்டங்களை இதுவரை யாரும் செய்ததில்லை. ரூ.19 ஆயிரம் கோடி நிதியை 9.5 கோடி விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டம் மூலம் பெற்றுள்ளனர். இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் 38 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர். 2022 முடியும் போது விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். வேளாண்துறைக்கு தனி பெட்ஜெட்டை வரவேற்கிறோம். வேளாண்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்டு வர வேண்டும். புள்ளி விவரம் கொடுப்பதோடு இருந்துவிடாமல், எந்த மாதிரி திட்டம் வைத்துள்ளனர் என்பது குறித்து தெளிவு வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் யாரும் போராடவில்லை. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி கூட இதற்கு ஆதரவு தெரிவித்தார். போராடுபவர்கள் வேளாண் சட்டத்தில் என்ன திருத்தம் வேண்டும் என ஆக்கப்பூர்வமான விசியங்களை சொல்ல மறுக்கின்றனர். இதை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.” என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தாக முதல்கட்டமாக தெரிகிறது. சார்ஜ்சீட் போட்டவுடன் உண்மை வெளியே வரும், அதன் பின் பார்க்கலாம்” என்றும் ரெய்டு குறித்து கூறியுள்ளார்.








