”நீங்க கிளியை பிடுங்கனா என்ன.. நாங்க எலியை வைத்து ஜோசியம் பார்ப்போம்” என பாரம்பரிய ஜோசியர் ஒருவர் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பட்டியலிடப்பட்டுள்ள உயிரினங்களை வீட்டில் வளர்க்க கூடாது என மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, பல்வேறு வகையான விலங்குகள் வீட்டில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போது பச்சை கிளியை வீட்டில் வளர்க்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், தற்போது வீட்டில் பச்சைக்கிளியை வளர்த்து வரும் நபர்கள் மற்றும் பச்சை கிளியை வைத்து சோசியம் பார்க்கும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களிடம் உள்ள பச்சைக்கிளியே வனத்துறையினர் ஒப்படைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏராளமான நபர்கள் தாங்கள் வீட்டில் வளர்த்து வரும் பச்சைக்கிளியை வனத்துறையினரிடம் ஒப்படைத்து வரும் சூழலில், பச்சைக்கிளியை நம்பி கிளி ஜோசியம் பார்த்து வந்த தொழிலாளர்கள் பலர் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் தற்போது மிகவும் கஷ்டமடைந்து வருகின்றனர்.
இந்த சூழலில், பாரம்பரியமாக 30 வருட காலமாக பச்சைக்கிளியை வைத்து சோசியம் பார்த்து வரும் ஒரு நபர் ”நீங்க, எங்க கிளியை தானே எங்கிட்ட இருந்து பறிப்பீங்க…, நாங்க எலியை வைத்து சோசியம் பார்ப்போம்…” என புதுவிதமான முயற்சியில் இறங்கி தற்போது எலியை வைத்து ஜோசியம் பார்த்து வருகிறார்.
அதாவது, தென்காசி மாவட்டம் தென்காசி நகரப் பகுதியில் வசித்து வரும் குமார் என்ற நபர் தான் தற்போது எலியை வைத்து ஜோசியம் பார்த்து வரும் சூழலில், தாங்கள் பாரம்பரியமாக பார்த்து வந்த தொழில் விட்டுப் போக கூடாது என்பதற்காகவும், அரசின் சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காகவும் தற்போது இந்த எலியை வைத்து ஜோசியம் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், கிளியை போல் எலியானது முறையாக சீட்டு எடுக்க தவறுவதாகவும், முறையான பயிற்சி அளித்த பின் எலியானது தகுந்த சீட்டை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது குற்றாலம் பகுதியில் சீசன் களை கட்டி வரும் சூழலில், குற்றாலம் பகுதியில் எலியை வைத்து ஜோசியம் பார்த்து வரும் குமார் என்ற நபரிடம் ஏராளமான சுற்றுலா பயணிகள் சோசியம் பார்த்து தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொண்டு மகிழ்ச்சியில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.







