கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்து கலந்துரையாடினார்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படுகின்றன. இந்த முறை இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படுகின்றன. அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும், மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படுகின்றன.
நேற்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பட்டு வேட்டி, சட்டையில், தமிழ் பாரம்பரியத்திற்கு ஏற்ப கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். பின்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரங்கை திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த அரங்கில் இன்று பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
Delighted to meet legendary Hollywood actor Michael Douglas at India Pavillion #CannesFilmFestival2023
Had a wonderful discussion with him on a range of topics- Indian movies' growing reach from Local to Global.
(1/2)@ianuragthakur @Festival_Cannes#IndiaAtCannes #Cannes2023 pic.twitter.com/Hmkzi2XZDE— Dr.L.Murugan (@Murugan_MoS) May 18, 2023
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸை கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியா அரங்கில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி; இந்திய திரைப்படங்கள் உள்நாடு முதல் வெளிநாடு வரை வளர்ச்சி பெற்று வருவது உள்ளிட்ட பலவற்றை குறித்து அவருடன் கலந்துரையாடினேன். கோவாவில் நடைபெற உள்ள 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழா பற்றியும் அவரிடம் பேசினேன்” என்று பதிவிட்டுள்ளார்.







