தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை: மாதவன்

ஜெ.தீபாவை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன்  என்று க.மாதவன் விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பித்தார். சில காலம் அவர் மீது கவனம்…

ஜெ.தீபாவை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன்  என்று க.மாதவன் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பித்தார். சில காலம் அவர் மீது கவனம் குவிய ஆரம்பித்த நிலையில், அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபாடு காட்டவில்லை. தனது இயக்கத்தையும் கலைப்பதாக அறிவித்துவிட்டார்.

 

இந்த நிலையில் ஜெ.தீபா தான் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து தன் கணவர் மாதவன் தன்னை பிரிந்து விடுவதாகக்கூறி துன்புறுத்துவதாக இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதனை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேடஸாகவும் வைத்திருந்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த ஜெ.தீபாவின் கணவர் மாதவன், “எனது மனைவி தீபா என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்பொழுது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது” என்று விவரித்துள்ளார்.
மேலும், “அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்ப தகராறு தான். அவர், ஏதோ கோபத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டே்டஸ் போட்டுள்ளார். அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன். அவர் மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை. இதுவும் கடந்து போகும்” என்று விளக்கமளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.