பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இப்போது இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் பல்வேறு வழித்தடங்களில் மாநகர பேருந்து சேவை தொடங்கப்பட்டது. நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை தொடங்கி வைத்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மா சுப்பிரமணியன் என்றாலே மாஸ்தான். நாங்களெல்லாம் நடந்துகொண்டிருக்கிறோம், அவர் ஒடிக்கொண்டிருக்கிறார் என்று பாராட்டினார்.
நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பெண்கள் பேருந்துகளை பயன்படுத்துவதாக கூறிய அமைச்சர், 2,500 பேருந்துகள் தற்போது கூடுதலாக இயக்கப்பட்டு வருவதாகவும், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இப்போது இல்லை என்றும் கூறினார். போக்குவரத்துத் துறையில் ஊழலை ஒழித்துள்ளதாகவும், நிதிச்சுமையை பற்றி கவலைப்படவில்லை. மக்கள் நலனைத்தான் முதலமைச்சர் பார்க்கச்சொல்லியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.55.15 நஷ்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நெருக்கடியில் போக்குவரத்துத் துறை உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை ஆகியவை அதிக கடனில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர்.








