”எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டு உறவு இல்லை, அது டெல்லியில் இருந்து சொன்னாலும் சரி!” – ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டு உறவு இல்லை, அது டெல்லியில் இருந்து சொன்னாலும் சரி என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்த நிலையில், அவரது கருத்தை தான் வழிமொழிவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல்…

எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டு உறவு இல்லை, அது டெல்லியில் இருந்து சொன்னாலும் சரி என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்த நிலையில், அவரது கருத்தை தான் வழிமொழிவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:

நம்மிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போது நாட்டுமக்கள் ஆதரவு அளித்தார்கள். எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டு உறவு இல்லை, அது டெல்லியில் இருந்து சொன்னாலும் சரி. பா.ஜ.க வுடன் தோழர்களாக இருக்க முடியும் தொண்டர்களாக இருக்க முடியாது. அவர்களின் தயவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக அவர்களை புறந்தள்ளவும் இல்லை. அவர்களாக வந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

இதனை அடுத்து கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் நான் ஆதரவு தராவிட்டால் பழனிசாமி அரசு முடிந்திருக்கும். நான்கரை ஆண்டுகள் எல்லாறையும் எல்லாவற்றையும் பாடாய் படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. திருச்சி மாநாட்டை விட கொங்கு மண்டல மாநாடு சிறப்பாக இருக்க வேண்டும். அது தான் என் வேண்டுகோள். கட்டளையும் கூட. இணைப்பு என்ற வார்த்தையே இல்லை என பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னார். அதை நான் வழி மொழிகிறேன். இனி அந்த தவறை செய்ய மாட்டோம் என்ற உத்தர வாதத்தை தொண்டர்களுக்கு தருகிறேன் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணியா என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பாஜக தலைவர்கள் என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது அவருக்கே தெரியவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சரி இல்லை என மத்திய அரசே சொல்கிறது என்றும் ஓபிஎஸ் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.