மதுரை கட்டடம் இடிந்து விழுந்த விபத்து : இருவர் மீது வழக்கு பதிவு!

மதுரை மாவட்டம் விளாங்குடி அருகே கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு, கட்டட ஒப்பந்தகாரர் இளமதி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   மதுரை மாநகராட்சி…

மதுரை மாவட்டம் விளாங்குடி அருகே கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு, கட்டட ஒப்பந்தகாரர் இளமதி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மதுரை மாநகராட்சி 20வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி, சொக்கநாதபுரம் 1வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் மதி என்ற பில்டிங் காண்டிரக்டரிடம் வீடு கட்டும் ஒப்பந்தம் செய்து வீடு கட்டி வந்தார். இந்த பணியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியப்பட்டியை சேர்ந்த 4 தொழிலாளர்கள் இன்று கட்டட வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது மாடிக்கு செல்வதற்கான படி கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் இடிபாட்டுக்கு சிக்கி தவித்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை துவக்கினர்.

இந்த சம்பவத்தில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரெட்டியப்பட்டியை சேர்ந்த மூக்காயி (52) இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டார். மேலும் ரெட்டியப்பட்டியை சேர்ந்த மலையாண்டி மகன் தொண்டிச்சாமி – கட்டையன் (46), ஜோதி(52) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தை காவல்துறை துணை ஆணையர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கட்டட விபத்து தொடர்பாக வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு, கட்டட ஒப்பந்தகாரர் இளமதி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கூடல் புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.