அதிமுக 3 கூறுகளாகப் பிரிந்துவிட்டது. இனி அதிமுக ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநில செயலாளர் கேபாலகிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தராக உள்ள அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பு இல்லாமலேயே விழா ஏற்பாடு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. இதிலிருந்து ஆளுநர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழக
அரசு இந்த விஷயம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை செய்ய வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சம்பவம் தொடர்பாக என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை அவர் விளக்க வேண்டும்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அதிமுக 3 கூறுகளாகப்
பிரிந்துவிட்டது. இனி அதிமுக ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு இல்லை. அதிமுகவால் இனி மக்கள் நலப் பிரச்னைகளில் அக்கறை காட்டாத நிலை ஏற்பட்டுவிட்டது. தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே தற்போது ஒருவருக்கு
ஒருவர் குற்றச்சாட்டை கூறிக்கொண்டு பிளவுபட்டு நிற்கின்றனர். திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் செய்து வரும் நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால், மக்கள் நலன் இல்லாத திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் குறித்தும் தாங்கள் எதிர்த்து வருகிறோம். தமிழக முதல்வர் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு விஷயங்களில் அதிமுக நடத்திய அதே நடைமுறையைதான் திமுக அரசும்
பின்பற்றுகிறது. இந்த நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். திமுக தலைவராக இருந்த கருணாநிதி தான் தனியாரிடம் இருந்த போக்குவரத்து துறையை அரசுக்கு கொண்டு வந்தார். ஆனால், தற்போதைய திமுக அரசு போக்குவரத்து துறையை தனியாரிடம் தாரை வார்ப்பதற்காக செய்திகள் வருகின்றன. அவர்கள் உன்னதமாக மதிக்கக்கூடிய கருணாநிதி செய்த திட்டத்தை மாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அமைச்சர்கள் பலர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் சிக்கிய சர்ச்சையில் கூட அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவரிடம் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.
தமிழக முதல்வரும் அமைச்சர்கள் இதுபோன்று நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்று அடிக்கடி கூறி வருகிறார். இருந்தாலும் தமிழக அமைச்சர்களில் பலர் பல்வேறு
சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அமைச்சர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து
பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சர் ஒரு வினை ஆற்றினால் மறுவினையை அதிகாரிகளும், பொதுமக்களும் ஆற்றினால்
என்னாவது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை சிவசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரிப்பது என்பது குடியரசு தேர்தலுக்கு மட்டும் தான். இது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி கிடையாது. பாஜக சார்பில் பழங்குடியின வேட்பாளரை நிறுத்தியதால் பல கட்சிகள் வேறு வழியின்றி பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குடியரசு தேர்தல் முடிவு 2024 ஆம் ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில்
எதிரொலிக்காது. குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது வேறு, பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு என்றார்.
-ம.பவித்ரா








