முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, சால்வைகள் வேண்டாம், புத்தகங்களை பரிசாக தாருங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தலைவர்களை பார்க்க வருபவர்கள் பொதுவாக பொன்னாடைகள் போர்த்துவார்கள் அல்லது பூங்கொத்துகளை கொடுப்பார்கள். அந்த கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் அலுவலக முகப்பிலேயே ”பூங்கொத்துகள் வேண்டாம். புத்தகங்கள் போதும்” என எழுதி ஒட்டப்பட்டிருக்கும். எந்த ஒரு முக்கிய பிரமுகர்களை சந்தித்தாலும் புத்தகங்களை வழங்கி வரவேற்பதும், வாழ்த்துக்கள் கூறுவதும் அவரது இயல்பு.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது மோடிக்கு அஜயன் பாலா எழுதிய ‘செம்மொழி சிற்பிகள்’ என்ற புத்தகத்தை அவர் பரிசாக வழங்கினார். இது போன்று முக்கிய பிரமுகர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை வழங்குவது, அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையாவும் இதே போல் தன்னை சந்திக்க வருபவர்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் பூங்கொத்து, சால்வைகள் அளிப்பதை தவிர்த்துவிட்டு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, “தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போது மரியாதை நிமித்தமாக பூக்கள் அல்லது சால்வைகளை கொடுப்பவர்களிடம் இருந்து அவற்றை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். மக்கள் தங்கள் அன்பையும் மரியாதையையும் பரிசுகளாக வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களை எனக்கு வழங்கலாம். உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்.







