ஜெய் பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது இல்லையா?… ஆதங்கத்தில் தமிழ் திரையுலகம்!

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை என தமிழ் திரையுலகமே ஆதங்கத்தில் உள்ளது.  69-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2021-ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன படங்களுக்கான விருதுகள் தான் அறிவிக்கப்பட்டன.…

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை என தமிழ் திரையுலகமே ஆதங்கத்தில் உள்ளது. 

69-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2021-ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன படங்களுக்கான விருதுகள் தான் அறிவிக்கப்பட்டன. அதில் RRR, புஷ்பா ஆகிய படங்களுக்கு அதிக அளவு விருதுகள் கிடைத்ததால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமா விருதுகளை குவிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாகத் தமிழ் சினிமா கடந்த ஆண்டு 10 தேசிய விருதுகளை அள்ளியது. ஆனால், இந்த ஆண்டு கடைசி விவசாயி திரைபடத்துக்கும் இரவின் நிழல் பாடலுக்கு மட்டுமே விருதுகள் கிடைத்துள்ளன.

சென்ற முறை சூரரைப்போற்று படத்திற்காக விருதை வென்ற சூர்யா, இந்த முறை ஜெய் பீம் படத்திற்காக வாங்குவார் எனவும் கருதப்பட்டு வந்தது. ஆனால், ஜெய்பீம் படத்திற்கு எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் தேசிய விருதுகள் வழங்கப்படுவதில் அரசியல் தலையீடு உள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில், ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால், நடிகர் நானி இதயம் நொறுங்கும் Emoji -யை பதிவிட்டிருந்தார்.

மேலும், ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? என பி.சி.ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ள தேசிய விருதுகள் திரைத் துறையில் ஒருவனாக எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஆனால் ஜெய்பீம் படத்திற்கு விருது வழங்கப்படாததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா..? அல்லது “இந்தியாவின்” குரலை கண்டு அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளதா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

என்ன தான் விருது கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த படமாக ஜெய் பீம் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.