ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், “கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் டெல்லியில் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை, மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிலை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? வன்முறை தொடர்பாக இதுவரை யாரேனும் கைது செய்யப்பட்டு உள்ளார்களா?” எனவும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய், “ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக டெல்லி வசந்த்குஞ்ச் காவல்நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை குற்றப்பிரிவு சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகின்றது.” என்று கூறியுள்ளார்.
மேலும், “காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் சம்மந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை கொடுத்த தரவுகளின்படி இதுவரை யாரும் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.








