போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.பி.ஜெயச்சந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சி குழுமத்தில் பொருளாதார குற்றப் பிரிவு
கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில்
நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பங்கு சந்தை, ஆன்லைன் வர்த்தகம், நிலம் மற்றும்
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக அளவில் வட்டி பெறலாம் என பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர். குறிப்பாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், lns international financial service மற்றும் திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் இ காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் அதிக அளவில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இதுபோன்று ஏமாற்று வேளைகளை பிரபலங்களை வைத்து செய்து வருகிறார்கள். ஆருத்ரா கோல்ட் நிறுவனங்களில் பல கோடி ஏமாற்றப்பட்டது. ஐஎப்எஸ் நிறுவனங்களில் 80 ஆயிரம் கோடி ஏமாற்றப்பட்டுள்ளது. ஆர்பிஐ வட்டி விகிதம் 5.5 சதவீதம் தான் கொடுக்க முடியும். அதை மீறி வட்டி கொடுப்பது சாத்திமில்லை. மோசடி செய்யும் நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இதில் யாரெல்லாம் பினாமியாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆருத்ரா நிறுவனத்தில் 150 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஐஎப்எஸ் 27 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.
நிதி நிறுவனங்களில் மோசடி செய்த பணத்தை வைத்து ஆடம்பர பங்களாக்கள், சொகுசு
கார்கள் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தவர்களின் வங்கி கணக்கு மற்றும்
சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மோசடியில்
ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் 164 வழக்குகள் பதிவு செய்து 1,160 கோடி ரூபாய்
மதிப்பிலான மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 250 கோடி ரூபாய்
சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு அதில் 27 ஆயிரத்து 500 முதலீட்டாளர்களை
கண்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
-ம.பவித்ரா








