”என்ன ஒரு ஜோக்!”- பாஜக பிரபலத்தின் புகாருக்கு நிதிஷ்குமாரின் பதில்

குடியரசு துணை தலைவர் தேர்தலில் தம்மை வேட்பாளராக அறிவிக்க பாஜகவிடம் வலியுறுத்தியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுசில்மோடி கூறியது சிறந்த ஜோக் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி…

குடியரசு துணை தலைவர் தேர்தலில் தம்மை வேட்பாளராக அறிவிக்க பாஜகவிடம் வலியுறுத்தியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுசில்மோடி கூறியது சிறந்த ஜோக் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.

பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளது ஐக்கிய ஜனதா தளம். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக நேற்று பதவியேற்றார் நிதிஷ்குமார்.

நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கை நல்ல தொடக்கம் என மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே சமயம் நிதிஷ்குமார் பீகார் மக்களுக்கும், தங்கள் கட்சிக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக பாஜகவினர் தங்களது ஆதங்கத்தை வெளிபபடுத்தி வருகின்றனர்.

நேற்று இது குறித்து பேட்டி அளித்த பீகார் மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுசில்மோடி, நிதிஷ்ழுமாரை பீகாரின் முதலமைச்சராக 5 முறை பாஜக ஆக்கியதாகவும், அதே சமயம் இரண்டுமுறை பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறியடித்துள்ளதாகவும் விமர்சித்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தம்மை வேட்பாளராக அறிவிக்க நிதிஷ்குமார் விரும்பியதாகத் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஐக்கிய  ஜனதா தளத்தின் மூத்த தலைவர்கள் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிடம் தூதுவிட்டதாகவும் சுசில்மோடி கூறினார். குடியரசு துணை தலைவர் ஆகும் ஆசை நிறைவேறாததாலேயே பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக்கொண்டதாகத் சுசில் மோடி தெரிவித்தார். பிரதமர் ஆகிவிடலாம்  என்கிற கனவில் தற்போது மகாகத்பந்தன் கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்துள்ளதாகவும் சுசில்மோடி விமர்சித்தார்.

இந்நிலையில் சுசில் மோடியின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ”என்ன ஒரு நகைச்சுவை” என கிண்டலடித்துள்ளார். இது முற்றிலும் பொய்யான புகார் என கூறியுள்ள நிதிஷ்குமார். தாம் ஒருபோதும் குடியரசு துணை தலைவர் பதவியை அடையவிரும்பியதில்லை எனத் தெரிவித்தார். தேசியஜனநாயக கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் செயல்பட்டதை அனைவரும் அறிவார்கள் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.