“கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது”- வேலுமணி கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பு கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பு கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக திமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை திரும்ப பெறுவதாகவும், வழக்குகளை ரத்து செய்யக்கோரி குற்றவியல் பிரிவில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை அடுத்த 25ம் தேதி தள்ளி வைத்தனர்.

அப்போது வேலுமணி சார்பில், “கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது” என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள், “விசாரணை தொடர்ந்து நடைபெறலாம். கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது. வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது” என்று குறிப்பிட்டனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.