நிதிஷ் குமார் எடுத்த முடிவு பாஜகவுக்கு சரியான நேரத்தில் விழுந்த சரியான அடி என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்தவராகக் கருதப்படுபவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் துணை தலைவரும் பிகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டெல்லி வந்த அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பிகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
இதையடுத்து சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா ஆகியோரையும் அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், தான் சந்தித்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், பிகாரில் நிதிஷ்குமார் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசை வரவேற்றுப் பேசியதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது அமைந்துள்ள அரசு, முந்தைய பாஜக அரசைப் போல் அல்லாமல் மக்கள் பிரச்னைகளை களையக் கூடிய அரசாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார்.
இந்து – முஸ்லிம், கோயில் – மசூதி என்றே பாஜகவின் அரசியல் இருப்பதாக விமர்சித்த தேஜஸ்வி யாதவ், தற்போதைய புதிய அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் விரைந்து செயல்படும் என்றார்.
வரும் 24ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதை சுட்டிக்காட்டிய தேஜஸ்வி யாதவ், வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு வேலை வாய்ப்பு அதிகரிப்பில் கவனம் செலுத்தப்படும் என்றார். இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முதல் மாநிலமாக பிகார் உருவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசு மக்களின் அரசு என தெரிவித்த தேஜஸ்வி யாதவ், புதிய அரசு வலிமையுடன் இயங்கும் என்றார். பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற நிதிஷ் குமாரின் முடிவு சரியான நேரத்தில் பாஜகவுக்கு கொடுக்கப்பட்ட சரியான அடி என தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார்.
பிகாரில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என தெரிவித்த அவர், பிறரை அச்சுறுத்துவதையே நோக்கமாகக் கொண்ட பாஜகவால் பிகாரிகளை அச்சுறுத்த முடியாது என குறிப்பிட்டார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆளும் கட்சியாக உருவெடுத்திருப்பதால் பிகாரில் இனி குண்டர்களின் ஆட்சிதான் நடைபெறும் என விமர்சித்த பாஜகவுக்கு பதில் அளித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கும் வரை குண்டர்களின் ஆட்சி ஒருபோதும் நடைபெறாது என குறிப்பிட்டார்.
இதுபோன்ற பொய்களை பரப்புவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ள அவர், 2024 தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பாடமாக அமையும் என்றார்.
தேஜஸ்வி யாதவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு இடதுசாரிகளின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றார். 2024 தேர்தல் முடிவுகள் குறித்து தற்போதே கருத்துக் கூற முடியாது என தெரிவித்த அவர், எனினும், பிகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் பாஜகவை வீழ்த்த வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.











