இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று வருவதை அடுத்து, நமது தொழில்களை ஜெர்மனி உற்று கவனிக்கத் தொடங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப் அகாடமி சார்பில் தமிழகத்தின் சிறந்த சுயதொழில்(Startups) நிறுவனங்களுக்கான பாராட்டு விழா கோவையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று சிறந்த சுயதொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கினார். விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், கோவையில் உள்ள முக்கிய தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விருதுகளை வழங்கிய பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது உற்பத்தித் தொழிலுக்கு முன்னுரிமையும் ஊக்கமும் அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே, நாட்டில் உற்பத்தி பெருக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த காலங்களில் லைசென்ஸ் கோட்டா ராஜ்ஜியம் இருந்ததை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், அந்த காலகட்டங்களில், நிறைய உற்பத்தி செய்ய தொழில் நிறுவனங்கள் விரும்பினாலும் அரசு அதற்கு அனுமதிக்காத நிலை இருந்ததாகத் தெரிவித்தார். அளவோடு உற்பத்தி செய்ய மட்டுமே அனுமதி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக, பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள் முன்னேற முடியாமல் தவித்து வந்ததாகவும் அவர் கூறினார்.
உற்பத்தி முறைகளில் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தி, தொழில்நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான நவடிக்கைகளை எடுத்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். கடந்த 2021ம் ஆண்டு பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு என தனி இடம் கிடையாது என அறிவிக்கபட்டதாகவும், எல்லா துறைகளிலும் தனியார் பங்களிப்புக்கும் இடம் இருக்க வழி வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டு நலன் கருதி, சில இடங்களில் மட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் எனவும், மற்றபடி பொதுத்துறை இருக்கும் எல்லா இடங்களிலும் தனியார் துறையும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறு குறு தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதாகத் தெரிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால், இந்திய தொழில்களை ஜெர்மனி உற்று கவனிக்கத் துவங்கியுள்ளதாக அவர் கூறினார்.