கூடலூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற விவசாயியை புலி தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிங்கனகொல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சு கிருஷ்ணன், தாம் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று அவரை தாக்கி, புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது, குஞ்சு கிருஷ்ணன், புதருக்குள் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து எம்.எல்.ஏ. ஜெயசீலன், கூடலூர் டிஎஸ்பி சிவக்குமார், கூடலூர் ஆர்டிஓ சரவணன் கண்ணன், தாசில்தார் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள், வனவினங்குகள் குடியிருப்புப்

பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.







