ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் ஓண்டோ மாகாணத்தின் ஓவோ நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது, தேவாலயத்திற்குள் திடீரென உள்ளே புகுந்து சிலர், கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.
இதில், பிரார்த்தனையில் பங்கேற்றிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. அதேநேரத்தில், நைஜீரியாவில் செயல்பட்டு வரும் சில ஜிகாதி குழுக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு நைஜீரிய அதிபர் முகம்மது புகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான முன்னாள் ராணுவ தலைவர் முகம்மது புகாரிக்குப் பதில் வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளும் ஏபிசி கட்சி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதால், இதன் பின்னணி குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.










