இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் நடந்த தேசிய புலனாய்வு முகமை சோதனையில் தமிழகத்தை சேர்ந்த முஹமது அலி ஜின்னா, முஹமது யூசுப், இஸ்மாயில் (எ) அப்பம்மா இஸ்மாயில் ஆகிய 3 பேர் உள்பட 45 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசியப் புலனாய்வு முகாமையும், அமலாக்கத் துறையும் இணைந்து இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தினர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சோதனை நடத்தபட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டது. 5 வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டது.
இதில் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கியது, தீவிரவாத நடவடிக்கைகள், ஆயுத பயிற்சி வழங்க முகாம்கள் நடத்தியது, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆட்களை சேர்த்தாது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் நடந்த கொலை சம்பவம் உள்ளிட்டவைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வன்முறை சம்பவங்கள் நடத்தவும், மத ரீதியாக கலவரம் நடத்தவும் திட்டமிட்டு பல கூட்டங்களை நடத்தியதும் தெரிய வந்துள்ளது.
பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டதாக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி பேராசிரியரின் கைகளை வெட்டியது, தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை கொடூரமாக கொலை செய்தது, பெரிய அளவில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ய வெடிபொருட்களை சேகரித்து வைத்தது உள்ளிட்ட பல்வேறு சாதி செயல்களில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம், பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கேரளாவில் இருந்து அதிகபட்சமாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசியப் புலனாய்வு முகமை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் தொடர்பான 19 வழக்குகளை விசாரித்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த முஹமது அலி ஜின்னா, முஹமது யூசுப், இஸ்மாயில் (எ) அப்பம்மா இஸ்மாயில் ஆகிய 3 பேர் உள்பட 45 பேரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








