தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஷாரிக், குக்கர் வெடிகுண்டை வெடிக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரித்து வரும் நிலையில் தீவிரவாதி ஷாரிக், கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வந்து தங்கிச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் என்ஐஏ அமைப்பின் இயக்குனர் தின்கர் குப்தா, இன்று மாலை டிஜிபி அலுவலகம் வந்து, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் தீவிரவாதிகளின் நடமாட்டம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







