நீயூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் கொரோனாவுக்கான அறிகுறி தென்பட்டுள்ளது. இந்நிலையில், RAT பரிசோதனையில் மிதமான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று அவருக்கு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், மே 8ஆம் தேதி முதல் ஜெசிந்தா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மே 21ஆம் தேதி காலை வரை ஆர்டென் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார். இதனால், நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள கார்பன் உமிழ்வு குறைப்பு திட்டக் கூட்டத்திலும், வியாழக்கிழமை நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்திலும் அவரால் கலந்துகொள்ள முடியாது. மேலும், வர்த்தகம் தொடர்பான அவரது அமெரிக்க பயண ஏற்பாடுகள் இதனால் பாதிக்கப்படாது.
மேலும், துணைப் பிரதமர் கிராண்ட் ராபர்ட்சன் தனது இடத்தில் இருந்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுவார் என அவரது அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement: