மதுரை மாநகரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நடத்திய பிரமாண்ட கள ஆய்வில் மக்களின் கோரிக்கைகள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
மதுரையில் இன்று நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பிரமாண்ட களஆய்வு நடத்தி வருகிறது. இதில், ‘மாமதுரை அவலங்கள், பிரச்னை என்ன? தீர்வு என்ன?’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த கள ஆய்வில், கழிவுநீர் ஓடைகளாகும் மழைநீர் வடிகால்கள், குடிநீரில் துர்நாற்றம், குண்டும் குழியுமான சாலைகள் இதனை பற்றியும் இதற்கு மதுரை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
கூடல்நகர் பகுதியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு பணிகள் நிறைவடையாதால் சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் சாலை விபத்துகள் நேரிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதள சாக்கடை மற்றும் குடிநீர் கொண்டு செல்லப்பட்ட கூடல்நகரில் தோண்டப்பட்ட சாலைகளால் தினமும் 10 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் கோசாக்குளம் பகுதி மக்கள் கூறுகையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக சேதமடைந்த சாலைகளை இதுவரை சீரமைக்கவில்லை. சுமார் 5 கி.மீ. வரை சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறினர். தென்பரங்குன்றத்தில் நடத்திய கள ஆய்வில், சாலைகள், கழிவறைகள் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். திருப்பரங்குன்றம்அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சுகாதார நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலவாசல் பகுதி மக்கள் கூறுகையில், பாதாள சாக்கடை இணைப்பில்லாமல் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியில்லை என்றும் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் கூறினர். குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் கழிவுநீரால் கட்டடங்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே, மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நியூஸ் 7 தமிழ் வாயிலாக தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொண்டனர்.
-இரா.நம்பிராஜன்








