முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவுக்கு புதிய ஒருங்கிணைப்பு அதிகாரி

மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல்துறை இயக்குநர் சந்திப்மிட்டல் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையடுத்து இதனை தடுக்கும் பணியில் கடலோர காவற்படையினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை மானியக்கோரிக்கையின் போது சென்னை “மெரினா கடற்கரையில் பொது மக்கள் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்களை தடுக்க சென்னை காவல்துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும்” என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் நோக்கோடு ஆலோசனைக்கூட்டம் அன்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாடி தலைமையில் நடைபெற்றது. இதில், மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக சந்திப்மிட்டல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் செயல்பட்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை ஒருங்கிணைத்தும், கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவில் கூடுதலாக 12 பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த நடவடிக்கை விரைந்து எடுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டது.

கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் அண்ணா நினைவிடம், காந்தி சிலை மற்றும் எலியட் கடற்கரை பகுதிகளில் அதிக இறப்பு ஏற்பட்டு இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு பயிற்சி பெற்ற உயிர்காப்பு படையினர் நிறுத்தப்பட வேண்டும் எனவும், கடற்கரையை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகளை வழங்கவும் கண்காணிக்கவும் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மெரினா கடற்கரை பகுதியில் விழிப்புணர்வு எச்சரிக்கை பலகைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

அவரச உயிர்காக்கும் சேவைக்கென இரண்டு 108 அவசர சிகிச்சை வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம், கடலோர காவல்படை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி உயிர் இழப்பு இல்லாத பாதுகாப்பான சென்னை மெரினா கடற்கரை உருவாக்க ஒத்துழைப்பதென முடிவு செய்யப்பட்டது.

காவல்துறையில் ஆயுதப்படை காவலர்கள் 50 பேருக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து அவர்களையும் கூடுதலாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றலாம். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டறை தொலைபேசி எண் 044-28447752 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவில் இருந்து நிலோபர் கபில் நீக்கப்பட்டது ஏன்?

Halley karthi

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!

Halley karthi

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன!

Ezhilarasan