மத்திய அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக 8 புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்று மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவை மாற்றத்தின் முன்னோட்டமாக மத்திய சமூகநீதி துறை அமைச்சர் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து விரிவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்று மாலை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த அமைச்சரவையில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முனைவர் பட்டம் உள்ளிட்ட உயர்கல்வி பெற்றவர்களும் இதில் இடம்பெறுவார்கள் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் 2024ல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களின் தேர்தலை கருத்தில் கொண்டே ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் முக்கிய அமைச்சர்களுடன் கடந்த ஒரு மாதக்காலமாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டிருந்தார். முன்னதாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.







