நேபாளம் : பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் மலைப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவெர்பலன்கோச் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பானேபாவிலிருந்து ரோஷி கிராமப்புற நகராட்சியில் உள்ள சன்குரே பகுதியை நோக்கி பயணித்த அந்தப் பேருந்து, பனேபா-பர்திபஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையின் ஓரத்திலிருந்த சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த பேருந்தில் 24 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், பேருந்திற்குள் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள துலிகேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்த 16 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.