தங்கள் வாழ்கையை சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்துப் போராடும் பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பெரும்பாலும் சிறைவாசம் அனுபவித்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், கறுப்பின மக்களின் மீதான நிறவெறிக்கும் இனவாதத்திற்கும் எதிராகப் போராடி, கைது செய்யப்பட்டு, 27 வருட சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா, துவண்டு போகாது, சிறையினுள் இருந்தும் தனது போராட்டத்தைத் தொடர்ந்த வரலாற்றைக் காண்போம்.
1918ல் தென்னாப்பிரிக்காவின் மிவிசோ கிராமத்தில் பிறந்த மண்டேலா, தன் இளம் வயதிலேயே, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், கறுப்பினத்தவருக்கான உரிமைகளை மீட்கவும் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பான ஆப்பிரிக்கத் தேசிய கட்சி, ஏ.என்.சியில் இணைந்தார். 1961ல் மண்டேலாவும் அவரது ஆதரவாளர்களும் தேசத்துரோகத்திற்காகக் கைது செய்து விசாரிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டாளும், 1962ல் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராபன் தீவு சிறைச்சாலையில் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மண்டேலா, 1963ஆம் ஆண்டு ரிவோனியாவில் கைது செய்யப்பட்ட ஏழு ஏ.என்.சி உறுப்பினர்களுடன் சேர்த்து மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின், ஜூன் 12, 1964 அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே மண்டேலாவின் 27 வருடச் சிறைவாசத்திற்கு அடித்தளமிட்டது.
தான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, பேனா பேப்பரோடு ஒன்றிய மண்டேலா, அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுக்கு, சிறை அதிகாரிகள், அரசாங்க அமைச்சர்களுக்கு, இறந்த சுதந்திர போராளிகளின் குடும்பங்களுக்கு இரங்கல், எனப் பல கடிதங்களை எழுதினார். ஒரு கடிதத்தில் தான் எப்போதும் குடிக்கும் ஒரு பாரம்பரிய வகை பாலை குடிக்க இயலாமல் தவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். 1976ல் எழுதிய கடிதத்தில் “13 ஆண்டுகளாக நான் ஒரு சிமென்ட் தரையில் நிர்வாணமாகத் தூங்கினேன். மழைக்காலத்தில் தரை மிக ஈரமாகவும் குளிராகவும் மாறும். இதனால், வெள்ளை நிற கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஆடைகள் தனக்கும் வேண்டும்” எனக் கடிதம் மூலம் சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். 1980 வரை, சிறையில் மண்டேலா உட்பட அனைத்து கறுப்பின கைதிகளுக்கும் சூடான நீர், செய்தித்தாள், ரேடியோ, சரியான உணவு, மருந்துகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் அனைத்தும் மறுக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை, ஒரு குடும்ப பார்வையாளர் மட்டுமே அவரை சிறையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 500 வார்த்தைகள் மிகாமல் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை மட்டுமே அவரால் அனுப்பவும் பெறவும் முடியும். இந்த கடிதங்கள் சிறை அதிகாரிகளால் படிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட பின்னரே, சிறைக்கு வெளியே செல்லும். ஆனால், யாருக்கும் தெரியாத வகையில் தன் 500 பக்க சுயசரிதையை, 50 பக்கங்கள் கொண்ட சிறிய கையளவு புத்தகமாகச் சுருக்கி, அதனை மறைத்து, சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே செல்லும் கைதியின் மூலம் கடத்தி, அது தன் இயக்கத்தினரைச் சென்றடையச் செய்தார் மண்டேலா . ராபன் தீவு சிறையின் அதிகாரிகளின் கண்ணில் படாத வகையில் கடத்தப்பட்ட அந்த கடிதத்திலிருந்த செய்தி, “ஒன்றாய் திரளுங்கள்! போராடுங்கள்! சண்டையிடுங்கள்! நம் ஒன்றிணைந்த கைகள் என்னும் இரும்புப்பட்டறைக் கல்லையும், ஆயுதப் போராட்டம் என்னும் சுத்தியலையும் வைத்து நிறவெறியை நசுக்குவோம்!” என்பதே ஆகும். இவ்வாறாக, சிறையிலிருந்தாலும், தன் அறிக்கைகள், கடிதங்கள் மூலம் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் புரட்சி வேட்கை குறையாமல் பார்த்துக்கொண்டார் மண்டேலா. நம்பிக்கையூட்டும் எழுத்துக்களை கொண்ட அவரது கடிதங்களே, தனது கைதால் துவண்டிருந்த ஆதரவாளர்களுக்கு ஊக்க மருந்தாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
1990ல் ஆட்சி மாற்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நெல்சன் மண்டெலா, தன் இறுதி மூச்சு வரை தன் மக்களுக்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் போராடி வந்தார். எழுதும் பேனா, போர்வாளை விட வலிமையானது எனப் பலர் கூறுவர். பேசுவது மட்டுமில்லாமல், தன் எழுத்துக்களின் மூலமாகவும் புரட்சி செய்து அதை நிரூபித்துக் காட்டியவர் மண்டேலா.











