அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் SDPI போட்டி – வேட்பாளராக நெல்லை முபாரக் அறிவிப்பு!

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முபாரக் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.  இதையடுத்து இன்று…

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முபாரக் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.  இதையடுத்து இன்று 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று (மார்ச் 20) வெளியிட்டது.  அதனைத் தொடர்ந்து புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டது.

இதுதொடர்பாக அதிமுக தரப்பு விடுத்துள்ள அறிக்கையில்,  “அதிமுகவுக்கும், புதிய தமிழகம் கட்சிக்கும் இடையே இன்று உடன்பாடு ஏற்பட்டது.  அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதேபோல்,  அதிமுகவுக்கும், எஸ்டிபிஐ கட்சிக்கும் இடையே இன்று உடன்பாடு ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள SDPI கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை,  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,  எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து அதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  சென்னை மண்ணடியில் உள்ள அக் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் திண்டுக்கல் வேட்பாளாரை அறிவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்க்கு பின்னர் எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் வேட்பாளாராக நெல்லை முபாரக் அறிவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும்,  திண்டுக்கல் தொகுதி வேட்பாளாருமான நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

திண்டுக்கல் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. வேட்பாளாராக களம் இறங்கும் என்னை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.  திண்டுக்கல் அதிமுக வின் கோட்டை.  குடியுரிமை திருத்தச்சட்டத்தில் அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை தற்போது மாற்றிவிட்டது.

திமுக மக்களிடம் சென்று வாக்கு சேகரிக்க ஏதும் இல்லை.  மக்களின் பிரச்னைக்காக போராடிய தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக – திமுக கூட்டணி தான் உள்ளது.  இந்தியா கூட்டணி என்பது தமிழகத்தில் இல்லை.  இரட்டை இலை சின்னத்தில் நிற்பதால் எஸ்டிபிஐ கட்சி தனித்தன்மையை இழக்காது.  குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னத்தை கொண்டு சேர்க்க இயலாது என்பதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டி.

இவ்வாறு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவரும்,  திண்டுக்கல் தொகுதி வேட்பாளருமான நெல்லை முபாரக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.