தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் சரவணன், உறவினர் ஜெயபால் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கவின் ஆணவக் கொலை வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய திருப்பமாக சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த சிபிசிஐடி அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களின் அடிப்படையில் கிருஷ்ணகுமாரியை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட அவரை போலீசார் நெல்லை 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







