நெல்லையில் குடும்ப உறவுகள் துணை இல்லாமல் மாநகராட்சி இல்லத்தில் வசித்து வரும் முதிய தம்பதியினருக்கு மணி விழா நடத்தி அசத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த தம்பதி சண்முகம் – பொன்னம்மாள். சண்முகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியதால் அவரது மனைவி பொன்னம்மாள் வீட்டு வேலை செய்து தனது கணவரை பராமரித்து வந்த நிலையில், கொரனோ பேரிடரால் பொன்னம்மாளும் வேலை இழக்கவே இருவரும் வீதிக்கு வந்துள்ளனர். பின்னர் திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கபட்டனர். இரண்டு ஆண்டுகளாக இத்தம்பதி இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில் தங்களுக்கு 60-ம் கல்யாணம் நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.
இதை அறிந்த திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணன், இருவருக்கும் மணி விழா நடத்த முடிவெடுத்துள்ளார். அந்த வேளையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் சரவணனை அனுகி தங்கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென கேட்டபோது சண்முகம் – பொன்னைம்மாள் தம்பதியின் மணி விழாவை நடத்தி தரும்படி சரவணன் கேட்டுள்ளார்.
அவரும் சம்மதிக்கவே தொல்.திருமாவளவன் பிறந்தநாளான இன்று, ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்து சண்முகம் – பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா ஏற்பாடு நடந்தது. இதையொட்டி இருவருக்கும் புத்தாடைகள் மாலைகள் வாங்கபட்டன. இதை அறியாத சண்முகம் திடீரென தனக்கு புத்தாடை வழங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மணி விழா கொண்டாடப்போகிறோம் என கூறியவுடன் சண்முகம் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இல்லத்தில் வசிக்கும் அனைவர் முன்னிலையில் சண்முகம் – பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா சிறப்பாக நடைபெற்றது. இருவரும் புத்தாடை உடுத்தி கொண்டு
ஒருவருக்கொருவர் மாலை மாற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் கூறும்போது, எங்கள் கட்சி தலைவர் பிறந்தநாளில் ஆதரவில்லாத இத்தம்பதிக்கு மணி விழா நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். எனது அம்மா இறந்து விட்டார் அவருக்கு இதுபோன்று மணி விழா நடத்த வேண்டும் என ஆசைபட்டேன் முடியவில்லை எனவே தற்போது இவர்களை எனது தாய் தந்தையாக நினைத்து இந்த மணி விழா நடத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
இதனிடையே, தங்களின் திருமணம் கூட இந்த அளவிற்கு நடந்தது இல்லை என்றும், பெற்றெடுத்த பிள்ளைகளைப் போன்று எங்களை கவனித்துக் கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சண்முகம் – பொன்னம்மாள் தம்பதியினர் தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்








