நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர உதவும் இந்தாண்டிற்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி நடத்தப்பட்டது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வை, 22 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததை அடுத்து, இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கான மறுதேர்வு ஜூன் 21ல் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதையடுத்து, புதிதாக வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது. இதனிடையே கடந்த தேர்வின் போது, வினாத்தாள் கசிய காரணமாக இருந்த, ‘டெலிகிராம்’ செயலியும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு இன்று நடக்கிறது.
நாடு முழுதும் மருத்துவ இளநிலை படிப்புக்கான, ‘நீட்’ மறுதேர்வு இன்று நடக்கிறது. ஆதார் அட்டை அடிப்படையிலான, ‘பயோ மெட்ரிக்’ சரிபார்ப்பு, கண்காணிப்பு கேமரா வாயிலாக சோதனை உள்ளிட்ட தீவிர பாதுகாப்பு அம்சங்களுடன், 551 நகரங்களில் நடக்கும் தேர்வை, 23 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 1.42 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்தநிலையில் பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒரு மணி நேரம் கூடுதலாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கண்காணிப்பு கேமரா தேர்வர்கள் காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ‘அதன் பின் வரும் தேர்வர்கள், மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என, என்.டி.ஏ., தெரிவித்துள்ளது.




