நீட் வினாத்தாள் கசிவு வழக்கு – குற்றவாளிகளின் காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 10 முக்கியக் குற்றவாளிகளின் காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 10 முக்கியக் குற்றவாளிகளின் நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முந்தைய காவல் காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, திஹார் சிறையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

மத்திய அரசு அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ பதிவு செய்த வழக்கில் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ தரப்பில் மூத்த அரசு வழக்கறிஞர் வி.கே. பதக் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளான யேஷ் யாதவ், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், தனஞ்சய் லோகண்டே, தேஜஸ் ஹர்ஷத் ஷா, சுபம் கைர்னார், மனிஷா வாக்மரே, மனிஷா ஹவால்தார் மற்றும் டாக்டர் மனோஜ் ஷிரூரே ஆகிய 10 பேரின் காவலை ஜூலை 11 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பிரஹலாத் குல்கர்னி, சிவராஜ் ரகுநாத் ஆகியோர் ஏற்கனவே ஜூலை 8 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வினாத்தாள் கசிவின் பின்னணியில் உள்ள நெட்வொர்க் குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் திடுக்கிடும் விபரங்களை அடுக்குறது. கைது செய்யப்பட்ட மங்கிலால் பிவாலின் மொபைல் போனில் இருந்து கசிந்த நீட் தேர்வு வினாத்தாள்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மங்கிலால் பிவால், இந்த வினாத்தாளை யேஷ் யாதவ் என்பவரிடமிருந்து ரூ.10 லட்சத்திற்கு டீல் பேசி வாங்கியுள்ளார். பின்னர், மங்கிலால் பிவால் இந்த வினாத்தாளைத் தனது மகன் விகாஸ் பிவாலின் தேர்வுக்காகப் பயன்படுத்தியதுடன், பல்வேறு நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர்களிடம் தலா ரூ. 12 லட்சத்திற்கு விற்றுப் பணம் சம்பாதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் முதலில் டாக்டர் சுபம் கைர்னார் மூலம் யேஷ் யாதவிற்கும், அவரிடமிருந்து மங்கிலால் பிவாலுக்கும், அங்கிருந்து விகாஸ் மற்றும் தினேஷ் பிவாலுக்கும் வினாத்தாள் சங்கிலித் தொடராகக் கசிந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.