கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்திற்குள் நீட் தேர்வை அனுமதிக்காத நிலையில், முதலமைச்சர் பழனிசாமியால் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதால், மாணவர்கள் உயிரை மாய்த்துக்
கொண்டனர் என சாடினார்.
மேலும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், அடுத்து வந்த அதிமுக அரசால் கிடப்பில் போடப்பட்டது என குற்றம்சாட்டிய ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் 4 அல்லது 5 மாதங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன் என பேசினார்.







