மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு அவசியமாகும். இந்த நிலையில் 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ம்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு மீண்டும் நடைபெறும் என்றும், தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமலா நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் விற்பனை தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தேர்வு முகமை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஏற்கெனவே கட்டிய தேர்வு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.







